பதிவுலகில் ஒரு வருடம்

விளையாட்டாக ஆரம்பித்த பதிவுலகத்தில் ஒரு வருடத்தை கடந்து விட்டேன். ஓயாமல் பதிவு எழுதியதால் ஒரு மாத விடுமுறையையும் எடுத்துக் கொண்டேன். (திருப்தி இல்லாத பதில்) இதுவரை 225 பதிவுகளை கிறுக்கி விட்டேன். (அதில் ஆரம்பத்தில் ஐந்து பதிவுகள் கொப்பி பேஸ்ட்) ஆயிரத்து 731 பின்னூட்டங்கள், 89 பின் தொடர்வோர் என ஓரளவு ஆரோக்கியமாகவே என் வலைப்பூ இருப்பதாக கருதுகின்றேன். அதிகரித்த வேலைச்சுமை பதிவுகளை எழுத விடாமல் தடுக்கிறது. இருந்தும் வாரம் ஒரு பதிவு என்ற கணக்கில் தொடரலாமென எண்ணியுள்ளேன். இதுவரை காலமும் என் மனதில் பட்ட கருத்துக்களை என் தளத்திலோ, பிறர் தளத்திலோ வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றேன். அதனால் யார் மனமாவது புண்பட்டிருப்பின் அதற்கு மன்னிப்பும் கேட்கின்றேன். இலங்கையில் - உலகில் பல விடயங்கள் கடந்த மாதத்தில் நடந்தேறியுள்ளன. பல விடயங்களை எழுத எத்தணித்த போதும் முடியவில்லை. எல்லாவற்றையும் ஒரு பதிவில் எழுதி விடவும் முடியாது. சில விடயங்களைத் தொட்டுச் செல்கின்றேன்.
பதிவர் ஜனா, கூல்போயுடன் சந்திப்பு
கடந்த மாதத்தில் தனிப்பட்ட தேவை காரணமாக இரண்டு தடவை யாழ்ப்பாணம் சென்று விட்டேன். முதல் தடவை எதேச்சையாக பதிவர் கூல்போய் கிருத்திகனை இணுவில் கந்தசுவாமி கோயில் மஞ்சத் திருவிழாவில் கண்டது. கமராவும், வீடியோவுமாக ஆள் நடமாடும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் போல் காட்சியளித்தார். சுவாமியைக் கும்பிடாது இலங்கைப் பதிவுலகம் பற்றி அந்த இரைச்சலிலும் நிறையவே கதைத்தோம். இரண்டாவது தடவை சென்றபோது மனுஷர் படு பிஷி. சந்திக்க முடியாது போயிற்று.

இரண்டாவது தடவை சென்ற போது பதிவர் ஜனாவை நல்லூர் முன்றலிலே சந்தித்தேன். நான் பதிவுலகத்தில் நுழைந்த காலத்தில் இருவரும் பின்னூட்டங்களில் பேசிக் கொண்டோம். (வான்மீகி என என் வலைப்பூ பெயர் அப்போது இருந்தது) அதை விட வேறு பழக்கம் எமக்குள் இல்லை. ஆனால் இருவருமே சந்திக்க ஆர்வப்பட்டுக் கொண்டோம். இருவரின் எண்ணங்களும் ஏறக்குறைய ஒத்துப் போவதாலோ தெரியவில்லை. நிறையவே கதைத்தார். பல விடயங்கள் பற்றிச் சொன்னார். 'அட! இப்பிடிப்பட்ட ஆட்களுடன் வலையுலகில் நுழைந்தபோதே நட்புக்களை ஏற்படுத்திக் கொண்டால், எனக்கான பாதையை வகுத்திருப்பேனே" என நினைத்துக் கொண்டேன். (அவருடன் பழகிய பதிவர்களுக்கு அவரைப் பற்றி என்னை விட நன்றாகவே தெரியும்) இருவரும் நேரம் போவதே தெரியாமல் மூன்று மணி நேரம் வரை கதைத்தோம். இறுதியில் அப்பாவியாக என்னுடன் வந்த வலைப்பதிவுடன் சம்பந்தப்படாத நண்பர் விபரம் புரியாமல் திரு திருவென விழித்ததால் பேச்சை இடையில் முறித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதாயிற்று. நடமாடும் தகவல் களஞ்சியம் அவர். (ரொம்ப ஓவரா புகழுரனோ ஜனா அண்ணா)

எடுத்த படத்தை காட்டின பிறகு 'அட! நான் இவ்வளவு மொத்தமா என அப்பாவியாகக் கேட்டார் மிஸ்டர் ஜனா
புதுச்சொந்தம் பிறிஸ்னிகா
என் மூத்த சகோதரிக்கு பெண்குழந்தை பிறந்தது (ஜூன் 26) பெயரையும் நான் தான் வைத்தேன். (பிறிஸ்னிகா) குழந்தைகள் என்றால் எனக்கு உயிர் (எல்லோருக்கும் தான்) அதற்காகத் தான் இரண்டு தடவை யாழ்ப்பாணம் சென்றேன். பிறந்த உடனும், தொடக்கு கழிவுக்கும்.
ஆசையாக நான் கொழும்பு ஹவுஸ் ஓப் பஷனில் வாங்கிக் காவிச் சென்ற தொட்டில். கவனிக்க... சங்கிலியும் போடுறன். அருகில் தம்பி, அவனருகில் இளைய சகோதரியின் மகன். பக்கத்தில் நோர்வேயிலிருந்து வந்த சித்தி மகன்.
நல்லூர் கந்தன்

யாழ்ப்பாணத்தை விட்டு கிளம்பிய கடைசி மூன்று வருடத்தில் ஐந்து தடவை திருப்பவும் யாழ் சென்றிருக்கின்றேன். ஆனால் ஒரு முறை கூட நல்லூர் சென்றதில்லை. இம்முறை சென்றேன். ஞாயிற்றுக் கிழமையானாலும் கூட்டம் குறைவில்லை. கற்பூரத்தை வாங்கி வாயிலில் கொழுத்தி விட்டு நிமிர்ந்த போது ஒரு கூட்டம், ஆண் பெண்ணென இருபாலாரும் நெற்றியில் விபூதிப் பட்டை பொட்டுடன். நெருங்கிப் பார்த்த போது தான் தெரிந்தது அனைவரும் சகோதர மொழிக்காரர். அன்றைய தினம் என்னைப் போல் ஒருசிலரைத் தவிர மிகுதி பெரும்பான்மையினரே! பெருமூச்சுடன் நண்பனிடம் சொன்னேன் 'என்னடா எங்கடை சனம் ஒண்டையும் காணல, எங்கை பாத்தாலும் அவங்க தானே!" என்றேன். அவன் சொன்னான் 'எங்கட சனம் ஏண்டா ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு வரப்போகுது". 'அட! ஆமால்ல..." பிறகு தான் உறைத்தது எனக்கு.
சரித்திரவீரன் சங்கிலி

வழமைபோல சரித்திரவீரன் சங்கிலியின் பாகம் 24 சங்கிலியன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. வாசிக்க கிளிக்குங்கள்....
பதிவர் ஜனாவுடன் கதைத்த போது சொன்னார், 'நல்லை அமிர்தன்" என்ற எழுத்தாளர் இலங்கை வந்துள்ளதாகவும் (புலம் பெயர்ந்து வசிப்பவர்) அவருடன் கதைக்கும் போது சொன்னாராம் 'இப்ப ஒரு பையன் சங்கிலி பற்றி வலைப்பூவில எழுதுறான். அவனுட்ட சொல்லணும். சங்கிலியனுக்கு ஒரு சித்தி இருந்தா. அவவை பற்றியும் எழுதச் சொல்லணும்" என்றாராம். காரணம் நல்லை அமிர்தன், சங்கிலியனின் சித்தி வழி வந்த பரம்பரையாம். இதனைக் கேட்ட போது எனக்கு மிகவும் சந்தோஷமாகவிருந்தது. சங்கிலியன் தொடருக்கான எழுது உழைப்பு வீண் போகவில்லை. ஏதோ ஒரு வாசகர் கூட்டத்தினர் அதனை படிக்கிறார்கள். வாக்களிக்கிறார்கள்.
இது தவிர 'விஜய்" சிறுவர் பத்திரிகையில் தற்போது சில்லாலையூர் சிவதாஸனால் எழுதப்படும் சங்கிலியன் தொடராக வெளிவருகின்றது. ஐந்து பாகங்கள் வந்து விட்டது. வாசித்துப் பார்த்தேன். முற்றிலும் என்னிலிருந்து வேறுபட்ட கதை. கூடியவரை வரலாற்றுடன் ஒன்றியே போயிருக்கிறார். (என் தொடரில் கற்பனை தான் அதிகம்). அவர் சங்கிலியன் வரலாற்றை சிறு பராயத்திலிருந்து ஆரம்பிக்கின்றார். நான் ஒரு குறித்த காலப்பகுதியில் நடந்த விடயத்தை மட்டுமே கருவாக எடுத்துக் கொண்டேன். சிறு பகுதியை வைத்தே இதுவரை 24 அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். இதில் முழு வரலாறையும் எடுத்தால்... அப்பப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!
ஆபாசச் சிலை

எங்கள் ஊரை அண்மித்த கோயிலொன்றின் கோபுரத்தின் அடிப்பகுதியில் ஆபாசாமான முறையில் மிகப்பெரிய சிலையொன்று வடிக்கப்பட்டுள்ளது. வடித்த சிற்பி தென்னிந்தியச் சிற்பி. நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 'எங்கள் இதிகாசங்கள், புராணங்களில் கூறப்படும் விடயங்களைத் தான் சிலையாக வடிப்பார்கள் என்று. குளித்துக் கொண்டிருக்கும் பெண்களின் ஆடைகளை கண்ணன் திருடிய போது, அவர்கள் பிறந்த மேனியுடன் வெளியில் வரும் காட்சி யாழ் பெருமால் கோயிலில் வடிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பெரிதாக ஆபாசம் இல்லை. ஆனால் மாறி மாறி இருவரும் பிறப்புறுப்புக்களில் கையை வைத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ஆபாசமாக இருக்கும் சிலைக்குரிய மூலக்கதை எது?. இதை வடித்து விட்டுச் சென்றிருக்கும் சிற்பியை பாராட்டுவதா, இகழ்வதா? இந்தச் சிலையால் கோயில் அறங்காவலர்கள் பட்ட தர்மசங்கடங்களை சொல்வதற்கு தனிப்பதிவு வேண்டும்.
முரளியின் சாதனை

இலங்கையணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்கள் என்ற சாதனையுடன் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சனத்துக்கு வழங்கப்படாத கௌரவம் முரளிக்கு வழங்கப்பட்டது எனக்கு பாரிய வியப்பு. சாதனை நாயகனை ரசிகர்களில் ஒருவனாக நானும் வாழ்த்துகிறேன். முரளி பற்றி நண்பர் ஒருவர் குறிப்பிட்டார், 'நீங்க அவனை எப்பிடி வேணுமானாலும் புகழுங்கோ, இகழுங்கோ... ஆனா தமிழன் எண்டு மட்டும் சொல்லாதைங்கோ" என்றார். எனக்கு முற்றிலும் அதற்கு உடன்பாடு இல்லா விட்டாலும் 'தான் தமிழன்" என்பதை அடையாளப் படுத்த பல இடங்களில் முரளி தவிர்த்த வந்ததை யாரும் மறுக்க முடியாது.
எந்திரன் காச்சல்

தற்போது இந்தியச் சினிமாவின் குறிப்பாக தமிழ் சினிமாவின் சூடான பேச்சு எந்திரன் பாடல் வெளியீடு. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வழமைபோல பாடல்கள் நேற்றே வெளியாகி விட்டன. கேட்டேன். இது ரஹ்மான் பாடல் அல்லவா? கேட்கக் கேட்கத்தான் பிடிக்கும். படத்துக்காக வெயிட்டிங்...
கதைப்பதற்கு நிறைய விடயம் இருக்கின்றது. பதிவை நீட்டாது இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
கானா வரோ
15 comments:
பதிவெழுத வந்து ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணத்தில் சந்தித்த பதிவர்கள்: கூல் போய், ஜனா அண்ணையின் பதிவுகளில் பின்னூட்டம் இட்டத்தில் படித்திருக்கின்றேன். ஆளைக்கண்டதுபோலவும் இருக்கு.
அப்புறம் ஜனா அண்ணை. நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறலாம் தப்பில்லை. எங்கள் பாதையை வகுக்க வழிகாட்டியவர். பெரும்பாலான பிரபல இந்திய பதிவர்களுக்கு அவர் பற்றி தெரியும்.
அடுத்து மாமா ஆகியதற்கு (தாய்மாமன்)வாழ்த்துக்கள்.
நல்லூர் திருவிழா தொடங்கப்போகுதில்லை..இனி நம்மாளுகள பார்க்கலாம்...
வாசிக்கத் தொடங்கிவிட்டேன்
அட..சிவ லிங்கமே அந்த குறியீடுதானே?
முரளி- உங்கள் நண்பரின் கருத்தே எனதும். சாதனைகள் எத்தனை வேண்டும் என்றாலும் நடக்கலாம்..தமிழ் உணர்வுதான் முக்கியம். தமிழை இகழ்ந்தவன் எவனும் ...வேண்டாம். கனக்க பேருக்கு கோவம் வரும்....
பிறகு குடிக்காட்டிலும் பறவாய் இல்லை. எங்கட தவறணை பக்கம் வந்து போங்கோவன்
முதல் அடிக்கடி உங்கள் பதிவை காணக்கூடியதாக இருந்தது. இப்போ சிறிய இடைவெளியின் பின்னர் வருகை தந்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்........ கலக்குங்கள்.... வாழ்த்துக்கள். விடா முயற்சியில் ஒரு மாதிரி பிளக்கரை எடுத்து விட்டீர்கள் சந்தோசம் . ஹ ஹ ஹா மாமாவாகி விட்டீர்களா ?
தாங்கள் வான்மீயாக இருந்தபோது சில தடவைகள் உங்கள் வலைக்கு வந்திருக்கின்றேன்.
தற்போது ஜனா அண்ணை ப்றி தாங்கள் எழுதியுள்ளதாக நண்பர் டிலான் கூறி வந்து எட்டி பார்க்கின்றேன்.
பாயாசம் நன்றாகத்தான் உள்ளது.
// 'அட! இப்பிடிப்பட்ட ஆட்களுடன் வலையுலகில் நுழைந்தபோதே நட்புக்களை ஏற்படுத்திக் கொண்டால் எனக்கான பாதையை வகுத்திருப்பேனே"//
(அவருடன் பழகிய பதிவர்களுக்கு அவரைப் பற்றி என்னை விட நன்றாகவே தெரியும்)
உண்மை.. வலையுலகில் நுளைந்தபோது என்ன? இப்போதும் அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
எந்திரன் பாடல்கள் சூப்பர்..
டிலான் said..
//ஆளைக்கண்டதுபோலவும் இருக்கு//
கிட்ட கிட்ட ஊர் தானே! எங்கையாவது சந்திச்சிருப்பம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இனி வருங்காலங்களில நிறைய பேசுவோம்.
//குடிக்காட்டிலும் பறவாய் இல்லை. எங்கட தவறணை பக்கம் வந்து போங்கோவன்//
உடன் கள்ளு வெறி இல்லையாம், குடிக்கவும் வந்து போவம்
kippoo said...
அது ஒரு பெரிய கதை.. ம்ம்ம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சயந்தன் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதுசரி நீங்க ஏன் பதிவு எழுதுறதை விட்டுட்டீங்கள்.?
வணக்கம் வரோ..
பந்தி போடாமல் பாயசம் மட்டும் வாத்து தருவது ஞாயமா என்ன?
மீண்டும் சிறு இடைவெளிக்கு பின்னர் பதிவுக்கு வந்தது சந்தோசம்.
கொஞ்சம்..ஓவராய்த்தான் புகழ்ந்திட்டீங்க..பத்தாக்குறைக்கு இந்த டிலான், சயன் என்ற பயபுள்ளைக..(பாசக்கார பசலுங்க)
தங்கள் மருமகளின் பெயர் வித்தியாசமாக உள்ளது. அந்த புதிய தேவதை, தன் மாமாவுக்கு
சகல நன்மைகளையும் தரட்டும்..
Jana said...
பந்தி போடாமல் பாயசம் மட்டும் வாத்து தருவது ஞாயமா//
பந்தி போட்டா நீண்டிடும் ஐயா...
//மருமகளின் பெயர் வித்தியாசமாக உள்ளது//
நான் கொடுத்த பெயர்களில் இருந்து தெரிவு செய்தது சகோதரி தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல!
கதைப்பதற்கு நிறைய விடயம் இருக்கின்றது. பதிவை நீட்டாது இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்//
சொல்லுங்க சொல்லுங்க இதுவே பெரிய பதிவு தான் :)
ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்
சௌந்தர் said...
ஹா ஹா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜெஸ்வந்தி said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்த்துக்கள் தொடருங்கள்
roshaniee said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்த்துக்கள் வரோ! ஒர் வருடத்தில் உங்கள் வளர்ச்சி இன்னும் இன்னும் வளரட்டும். " இலங்கை பதிவர்களுக்கு என்று ஏதாவது குழுமம் உள்ளதா? நானும் ஏதோ கிறுக்குகின்றேன். ஆனால், தொடர்புகள் குறைவாகவெ உள்ளது. மிக அண்மையில் ஜனா அவர்கள் எனது வலைப்பக்கத்தில் இணைந்தார். அவரைப்பற்றி இப்போதுதான் உங்கள் மூலம் கொஞ்சம் அறிகின்றேன். நன்றிகள். தொடர்பில் இருங்கள்
Post a Comment