Pages

Tuesday, January 17, 2012

த்ரீ இடியட்ஸ் - நண்பன் : கதாபாத்திர தெரிவின் பொருத்தப்பாடுகள் - பகுதி II

பகுதி I ஐ படிப்பதற்கு..


“நண்பன் படத்தில் விஜய்க்கு பதிலாக வேறு யார் நடித்தாலும் படம் ஹிட் தான். கதை அப்படி..” என குருட்டு ஜோசியம் சொல்லும் பலரும் நம்மில் இல்லாமல் இல்லை. இவ்வளவு ஏன்? நண்பனில் உள்ள ஐந்து பிரபல நடிகர்களுக்கு பதிலாக ஐந்து புதுமுகங்கள் நடித்தாலும் படம் நல்லாத்தான் இருக்கும். ஏன்னா கதை அப்பிடி.. ஆனால் இவ்வளவு காசை படத்திற்கு கொட்டுவார்களா? கிட்டத்தட்ட 60 கோடி தயாரிப்புச் செலவு. இதில் கதையை வாங்குவதற்கு பெரிய தொகை வேறு. ஏன் அப்படி? தயாரிப்புச் செலவின் 10 மடங்கை வசூலாக குவித்த ஹிந்தி த்ரீ இடியட்ஸின் கதையை யார் தான் மலிவாக கொடுக்க முன்வருவார்கள்?

எனவே பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்ட படத்தின் மூலம் பெரியளவான வசூலைப்பெறுவதற்கு பெரிய நடிகர் அவசியம். அதற்கு விஜய் எப்படிப் பொருத்தமாகின்றார்..
முதல் கதைக்கு தான் ஹீரோ தேவை. இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் காலேஜில் படிக்கக்கூடிய தோற்றத்தில் உள்ள மாஸ் ஹீரோ யார்? சந்தேகத்திற்கு இடமின்றி விஜய் முன்னிலை பெற்றுவிடுகிறார். பிறகென்ன பேசாமல் புக் செய்து விடவேண்டியது தானே! உருவம் மட்டும் ஒத்துப்போனால் போதுமா? அமீர்கானின் நடிப்பைக் கொண்டுவரக்கூடிய துரு துரு நடிகர் வேண்டும். அவரும் விஜயே.. மிக முக்கியமான விடயம் படத்தின் மையக் கருத்தை இளைஞர் - யுவதிகளுக்கு கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும். குறிப்பாக காலேஜ் - யுனிவர்சிட்டி யூத்களுக்கு.. இந்த யூத்களை அதிகளவில் ரசிகர்களாக கொண்ட நடிகர் யார்? அங்கும் விஜய் வென்று விடுகிறார். இறுதியில் நண்பன் எடுக்கும் போது என்னென்ன விடயங்களை எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இன்று நிறைவேறியிருப்பது சந்தோசமே!

விஜய் பற்றி கடந்த பாகத்திலும் நிறையவே கதைத்திருப்பதால் ஏனைய நட்சத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சத்யராஜ் - போமன் இரானி

போமன் இரானியின் பாத்திரத்திற்கு தமிழ் சினிமாவில் சந்தேகத்திற்கு இடமின்றி பொருந்துபவர் சத்யராஜ் மட்டுமே! பிரகாஜ் ராஜையோ, ராஜ் கிரணையோ வேறு எந்த குணச்சித்திர நடிகரையோ இந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்வது அவ்வளவு பொருத்தமல்ல. இதில் சத்யராஜ் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விடயம்.
ஹிந்தியில் படைத்த “வைரஸ்” கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழில் போட்டி போட்டு நடித்திருக்கிறார். ஆனால் வைரஸ் என்று வரவேண்டும் என்பதற்காக விருமாண்டி சந்தனம் என வைத்திருப்பது தான் கொஞ்சம் நெருடல். இவர் அடிக்கடி சேவ் செய்யும் காட்சியை சிலர் குறையாக கூறுகிறார்கள். அதாவது முகத்தில் எந்த முடியும் (தாடி) இல்லாமல் சேவ் செய்கிறாராம். வைரஸ் ஒரு வித்தியாசமான கரெக்டர் என படம் பார்க்கும் போது தெரிகின்றது. (ஹிந்தியிலும் அப்படித்தான்) அவர் சேவ் செய்வது ஒன்றும் பெரிய லாஜிக் மீறல் இல்லை சிபி சார். எனக்குத் தெரிந்து ஊரில் கெமிஸ்ரி மாஸ்டர் மகேஸ்வரனும் இப்படித்தான். அவர் முகத்தில் தாடியை ஒருநாளும் பார்க்க முடியாது.

போமன் இரானியின் முகம் படம் முழுவதும் உர்ரென விறைப்பாக இருக்கும். அது சத்யராஜில் மிஸ்ஸோ என எண்ணுகிறேன். இரானியை பார்த்தால் முகத்தில் ஓங்கி அறையலாம் போல தோண்றும். ஆனால் சத்யராஜ் சில இடங்களில் சிரிக்கிறார், நையாண்டி பண்ணுகிறார். இருந்தும் தமிழ் ரசிகர்களுக்கு எது தேவையோ அதைத் தந்து விட்டார்.

சத்யன் - ஒமி வைத்தியா

த்ரீ இடியட்ஸை ரீமேக் பண்ணப்போகிறார்கள் என்றதும் நான் நண்பர்களிடம் விசாரித்த முதல் விடயம் “அந்த காமடியன் கரெக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ஏதும் நியூஸ் தெரியுமா?” என்று தான். ஏன்னா, அமீர்கானை விட அதிக காட்சிகளில் ஒமி நடித்திருப்பார். இந்த பாத்திரத்தில் விவேக்கோ, வடிவேலோ, சந்தானமோ அல்லது வேறெந்த காமெடியன்களோ பொருந்த மாட்டார்கள் என தெரியும். இங்கு காமெடி என்பதையும் தாண்டி நிறையவே நடிக்க வேண்டியிருக்கின்றது. அதற்கு திறமையான குணச்சித்திர நடிகர் அவசியம். நாங்கள் நினைத்ததைப்போலவே பல தேர்வுகளின் பின் சத்யனைத் தெரிவு செய்திருக்கிறார் சங்கர். நண்பன் ஆடியோ ரிலீஸ் வரை “சத்யன் சொதப்பியிருப்பார்” என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால் ஆளாளுக்கு அவரின் பாத்திரம் பற்றி புகழும் போது எனக்கு நம்பிக்கை பிறந்தது. அதைப்படத்தில் நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
வைரஸ், தன் பேனையை சிறந்த மாணவனுக்கு தான் கொடுப்பேன் என சொல்லும் போது சத்யனின் முகபாவம் ஆகட்டும், தான் இரண்டாவது என தெரிந்ததும் குரூப் போட்டோ எடுக்கும் போது முகத்தை உம்மென வைத்துக் கொள்வதாகட்டும். சத்தமில்லாமல் சைலெக்ஸரை விட்டுவிட்டு “ஐ டிடின்ட் டூ திஸ், செந்தில் நீ தானே?” என கேட்கும் இடத்தில் ஆகட்டும் பிளந்து கட்டியிருப்பார். அதுவும் ஆசிரியர் தினப்பேச்சின் போது ‘சத்தமே இல்லாமல் படம் பார்த்துக் கொண்டிருந்த லண்டன் தியேட்டரில் கூட’ சிரிப்பொலி எழுந்தது. சத்யனுக்கு இனி ஏறு முகம் தான். விக்ரம் என்ற நடிகனை மக்களுக்கு எப்படி “சேது” அடையாளம் காட்டியதோ அதேபோல பத்து வருடங்களாக சினிமாவில் இருக்கும் சத்யனுக்கு ஒரு நண்பன்.

ஜீவா – சர்மான் ஜோசி

சர்மானின் கதாபாத்திரம் என்பதையும் விட சர்மான் போலவே ஏறக்குறைய உருவத்திலும் ஒற்றுமையுள்ள தமிழ் நடிகர் என்றால் அது ஜீவா மட்டும் தான். அவரின் நடிப்புக்கள் வெளிப்படுவதற்கு ஏற்றது போல பல காட்சிகள் நண்பனில் இயற்கையாக அமைந்தது அவருக்கு அதிர்ஸ்டமே! விஜய் - ஸ்ரீகாந்திடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்தாலும் திருப்பு முனையான சம்பவம் ஒன்றின் மூலம் நல்ல நண்பர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் முழு மனதுடன் சேருவது படம் பார்க்கும் எங்களுக்கும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது.
குடித்து விட்டு வைரஸ் வீட்டில் விஜயின் காதல் வசனங்களுக்கு கிற்றார் மீட்டுவது, மறுநாள் கிளாஸில் மோட்டார் ஸ்டார் செய்வது என நடிப்பில் அசத்தியிருப்பார். அதுவும் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் இடத்தில் இடத்தில் முகபாவங்கள் அருமை. சங்கர் சொன்னது போலவே, இன்றைய இளம் நடிகர்களில் கதைக்கு தேவையான நடிப்பைத் தருவதில் ஜீவா பெஸ்டாக உருவெடுக்கிறார்.

ஸ்ரீகாந்த் - ஆர்.மாதவன்

மாதவன் அருமையான தமிழ் நடிகர் என்பதால் அவரையே நண்பனுக்கும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் அடித்துப்பிடித்து ஸ்ரீகாந்த் அந்த இடத்திற்கு வந்து விட்டார். இந்தப் பாத்திரத்துக்கு மட்டும் ஸ்ரீகாந்தையும் விட யோசிக்க கூடிய வகையில் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றார்கள். ஆனாலும் ஸ்ரீகாந்த் அந்த கரெக்டருக்கு உயிர் கொடுப்பதற்காக எடுத்துக் கொண்ட சிரத்தைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். கடுமையாக உழைத்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெற்றி நாயகனாக வலம் வந்தாலும் இடையில் சறுக்கியிருந்த அவருக்கு நண்பனுக்கு பிறகு பல திருப்பங்கள் ஏற்பட இடமுண்டு.
அவரது குரலிலேயே காட்சிகள் நகர்வதால் தெளிவான உச்சரிப்புடன் கதையைக் கொண்டு செல்கிறார். இது படத்திற்கு முக்கியமானதும் கூட. சில காட்சிகளில் நடிப்பை வேண்டுமென்றே முகத்தில் கொண்டு வருவது பார்வையாளர்களுக்கு தெரிவது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. மாதவனுக்கு துக்க - சந்தோச முகபாவங்கள் இயல்பாக வந்துபோகும். அதை த்ரீ இடியட்ஸில் ரசித்தேன். ஸ்ரீகாந்திடம் அது மிஸ்ஸிங்.. ஹாஸ்பிட்டலில், ஜீவாவின் தமக்கையை ஸ்ரீகாந்த் திருமணம் செய்யவுள்ளதாக விஜய் கூறும் போது முகத்தில் செயற்கை நடிப்பு. ஆனால் தனது தந்தையிடம் தன் எதிர்காலம் பற்றி விளக்கும் போது தியேட்ரே நிசப்தம். அழகாக நடித்துப்போகின்றார். நிச்சயம் ஸ்ரீகாந்த் பாராட்டுக்குரியவர். தன்னை மீண்டும் தமிழ் சினிமாவில் நிரூபித்திருக்கிறார்.

இலியானா – கரீனா கபூர்

நண்பனிலும் கரீனாவை நடிக்க வைத்திருக்கலாம். சங்கருக்கு இது ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஆனாலும் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்களுக்கு நிறையவே செலவழித்திருப்பதால் தயாரிப்பாளரின் நன்மை கருதி அந்த முடிவை மாற்றியிருக்கலாம். தவிர, ஆந்திராவையும் திருப்தி படுத்த வேண்டும் என்பதால் இலியானா அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறார். இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் ஐந்து வருடங்களின் பின் ரீ-என்ட்ரி. அதுவும் தெலுங்கின் முன்னணிக் கதாநாயகியாக.. இவரை விஜயின் போக்கிரிக்கும் அழைத்திருந்தார்கள். அம்மணியின் பிஸி காரணமாக நடிக்க முடியவில்லை.
இலியானா மட்டும் நண்பன் படத்தில் நடிக்காமல் விட்டிருந்தால் “இருக்கானா இல்லையானா இலியானா…” என்ற பா.விஜயின் அருமையான பாடல் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்குமா? அந்தவகையில் அம்மணியை அன்புடன் வரவேற்கின்றேன். நடிக்க வேண்டிய இடத்தில் நடித்தும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும் (ஹி ஹி லிப்ட் டூ லிப்ட்) கலக்கியிருக்கிறார். ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு இருக்கு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா அம்மணி வெயிட்டு ரொம்ப கம்மி. நம்மளுக்கு (தமிழ் சினிமா ரசிகர்கள்) ஹன்ஸி போல ரொம்ப வெயிட்டான பார்ட்டி தான் வேணும்.

இவர்களைத் தவிர இயக்குனர் - நடிகர் எஸ்.ஏ.சூர்யா இரண்டு காட்சிகளானாலும் அருமையாக நடித்துவிட்டுப்போகிறார். செம்பை, பாத்ரூமில் போட எத்தணிக்கும் போது அவர் “வேணாம்” என்று சொல்லும் காட்சிகள் அவரின் தனிப்பாணி, அதுவே படத்திற்கும் தேவை. அக்கா அனுஜா, இவரை தமிழ்சினிமா அவ்வளவு அடையாளம் காணாவிட்டாலும் சங்கர் கண்டு கொண்டது அனுஜாக்கு பெருமையே! பிரசவக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். விஜய் தான் பாவம், அனுஜாவிடம் அடிவாங்கியது மட்டுமல்லாது இருட்டிலும் தவித்து விட்டார். பன்னீர்செல்வனாக வரும் விஜய் வசந்த். வித்தியாசமாக நடித்து ஒரு பாடலிலும் வந்து இறந்து போகின்றார். இவர்களை விட மில்லிமீற்றர் சிறுவன். படத்தில் முக்கியமான பாத்திரம். க்ளைமாக்ஸில் சென்ரிமீற்றராக வரும்போது சிரிப்பை தவிர்க்க முடியவில்லை. இவர்களுடன் மனோபாலா, பேராசிரியர்கள், சீனியர் ஸ்ருடண்ட்ஸ் என எல்லோருமே கதைக்காக நடித்திருக்கிறார்கள்.

தொடரும்

டிஸ்கி : அடுத்த பாகத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் நண்பன் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிப் பார்க்கலாம். சினிமா விமர்சனம் ஒன்றின் தொடர்பதிவுக்கு ஒரே மாதிரி தலைப்பு வைப்பது வரும் வாசகர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதால் தினம் ஒரு தலைப்பு,

6 comments:

K.s.s.Rajh said...

சத்யன் பற்றிய உங்கள் கருத்துக்கள் நிஜமானவை இந்த படத்துக்கு பிறகு நிச்சயம் சத்யன் தமிழ் சினிமாவில் இன்னும் பேசப்படுவார் என்பதி ஜயமில்லை...

K.s.s.Rajh said...

ஏன்ணே இன்னும் எத்தனை பகுதிகள் வரும் அவ்வ்வ்வ்வ்

Nilaa said...

விஜய் தான் பொருத்தமான ஆளு ... சூப்பர் சாய்ஸ் ... சூர்யாவும் ஓகே பட் அப்பிடீன்னா மத்த ரெண்டு ஆக்கள் ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதாபாத்திரங்களை உள்வாங்கி அலசி பதிவிட்டிருகிறீர்கள் வரோ...

அருமை.....

அடுத்த பாகத்திற்கு வெயிடிங்....

கோவை நேரம் said...

ஒப்பீடு விமர்சனம் அருமை....

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!தொடர்ந்து ஒரு படத்துக்கு இப்படிப் பிரித்துப்,பிரித்து விமர்சனம் எழுதுவது பதிவுலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்!/////K.s.s.Rajh said...
ஏன்ணே இன்னும் எத்தனை பகுதிகள் வரும் அவ்வ்வ்வ்வ்...////புள்ள கேக்குதில்ல???,சொல்லுங்க!!